இதை தொடர்ந்து பால விடுதி போலீஸ் ஸ்டேஷனில் இருவரும் பரஸ்பரம் புகார் அளித்தனர். இதையடுத்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சோளப்பயிரை அழிப்பதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை இயக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமசாமி தரப்பை சேர்ந்த தங்கவேல், 52, போலீசாரிடம் வலியுறுத்தினார்.
ஆனால் முழு விசாரணை முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர். இதற்கு உடன்படாத தங்கவேல், தனது கோரிக்கையை வலியுறுத்தி, மாவத்துார் ஊராட்சி, ரெட்டியப்பட்டியில் உள்ள சுமார் 200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தகவல் அறிந்த பாலவிடுதி இன்ஸ்பெக்டர் யசோதா, பாலவிடுதி பஞ்., தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, ஆர்.ஐ., சிவக்குமார், வி.ஏ.ஓ., முத்துச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கோபுரத்தில் ஏறிய தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சமரசமடைந்த தங்கவேல், கோபுரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டார். ஆனால் நீண்ட நேரம் கோபுரத்தில் நின்றதால், சோர்வடைந்து, கீழே இறங்க முடியாமல் தவித்தார்.இதனால் குஜிலியம்பாறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தில் ஏறி, 200 அடி உயரத்தில் தவித்த தங்கவேலுவை, பத்திரமாக மீட்டனர். இதனால் நேற்று மதியம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.