நாமக்கல்: 'தமிழகம் முழுவதும், வரும், 29ல், வணிகவரித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வணிகவரித்துறையினரால், சில்லரை விற்பனை கடைகளில் மேற்கொள்ளப்படும் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற புதிய நடைமுறை மற்றும் சரக்கு வாகன தணிக்கை தொந்தரவு காரணமாக, சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்கு, வணிகர்கள், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவும், டெஸ்ட் பர்ச்சேஸ் தொடர்பான விழிப்புணர்வை வணிகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், 6 மாத காலத்துக்கு, டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை முற்றிலும் நிறுத்தி வைக்க வேண்டும்.
அதன்பின், ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் வரவு, செலவு செய்யும் வணிகர்களிடம் மட்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நடைமுறைப்படுத்தி, சிறு-குறு வணிகர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும், ஒரே நாளில், அனைத்து வணிகவரித்துறை அலுவலகங்களிலும் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, வணிகர்கள் சந்தித்துவரும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில், வரும், 29, காலை, 11:30 மணிக்கு, மனு அளிக்கப்படுகிறது.
அதில், பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து தொழில் சார்ந்த வணிகர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.