சேலம்: 'சேலம் மாநகராட்சியில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க, 100 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும்' என, குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான குழுவினர் அறிக்கை அளித்தனர்.
சேலம் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக, சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கை:சேலம் மாநகருக்கு தனி குடிநீர் திட்டம், நங்கவள்ளி திட்டம் மூலம், 164 எம்.எல்.டி., என, 1,640 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. மக்கள் தொகை, 10 லட்சமாக உள்ள நிலையில், ஒருவருக்கு, 164 லிட்டர் கிடைக்கிறது. இரு நாளுக்கு ஒருமுறை வினியோகிக்கும்போது, 328 லிட்டர் வழங்க முடியும்.
இந்த அளவு தேவையற்றது என்பதால், அதற்கேற்ப குறைத்துக்கொண்டால், 200 லட்சம் லிட்டர் கூடுதலாக கிடைக்கும். இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு கூட தண்ணீர் வினியோகிக்கலாம். ஆனால் அதன் வினியோகம், குழாய் பராமரிப்பு பணிக்கு தேவையான ஒப்பந்த பணியாளரை நியமித்து கவனிக்க வேண்டும். மாநகருக்கு குடிநீர் வரும் நங்கவள்ளி, கோம்புரான்காடு, தொட்டில்பட்டி ஆகிய பகுதிகளில் தண்ணீர் விபரத்தை ஒரு உதவி பொறியாளர் கவனிக்கிறார்.
வினியோகத்தை சீரான முறையில் மேற்கொள்ள, 4 பணியாளர்களை மேற்பார்வைக்கு நியமிக்க வேண்டும். அதனால், மண்டலம் வாரியாக, ஒரு தொழில்நுட்ப பணியாளரை நியமிக்க வேண்டும்.
மாநகரில் உள்ள, 57 மேல்நிலை தொட்டிகளுக்கு, தண்ணீர் வரும் அளவு, வெளியேற்றப்படும் அளவை கண்காணிக்க, ஒவ்வொறு இடத்தில் தலா 2 மீ., 'சென்சார்' அமைக்க வேண்டும். மாநகரில் சேதம் அடைந்த பிரதான குழாய்களை மாற்ற வேண்டும். இதற்காக, 100 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும். ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட மேயர் ராமச்சந்திரன், 'அரசின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.