சேலம்: சேலத்தில் நாளை, 22 மையங்களில் நடக்க உள்ள போலீஸ் தேர்வில் பங்கேற்போர், 'எலக்ட்ரானிக்' உபகரணங்களை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாடா அறிக்கை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போலீஸ், தீயணைப்பு, சிறை காவலர் எழுத்து தேர்வு, சேலத்தில், 22 மையங்களில் நாளை நடக்க உள்ளது. தேர்வாளர்கள், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள், தேர்வு கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் மட்டும் அனுமதிக்கப்படுவர். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில், www.tnusrb.tn.gov.in இருந்து அழைப்பு கடிதத்தை நகல் எடுத்து தேர்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும். ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஓர் அசல் ஆவணத்தை கொண்டு வர வேண்டும். மொபைல் போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் உள்பட எந்த, 'எலக்ட்ரானிக்' உபகரணங்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது.