தொண்டாமுத்துார்: ''வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால், நீங்கள் முக்தி நிலையில் இருக்க வேண்டும்,'' என, வர்த்தக தலைவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆலோசனை வழங்கினார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில், 'ஈஷா இன்சைட்' என்ற வர்த்தக தலைவர்களுக்கான தலைமை பண்பு மேம்பாட்டு கருத்தரங்கு நேற்றுமுன்தினம் துவங்கியது. நாளை (27ம் தேதி) நிறைவடைகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியதாவது: நம் பாரத கலாசாரத்தில் முக்தியை வாழ்வின் குறிக்கோளாக கொண்ட ஒருவர், ஆன்மிக தேடல் உடையவராக பார்க்கப்படுகிறார். அத்தகைய நபர் எதையும் நம்பவும் மாட்டார்; மறுக்கவும் மாட்டார். எப்போதும் உண்மை தேடலிலேயே பயணித்து கொண்டிருப்பார்.
வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால், நீங்கள் முக்தி நிலையில் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் ஒரு வர்த்தகம் செய்யும் நபர் மட்டுமல்ல. அவர் எப்போதும் தீர்வுகளையும், சாத்தியங்களையும் தேடிக்கொண்டு இருக்கிறார். உங்களுக்கும், உங்கள் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களுக்கும் இடையில், ஒரு இடைவெளியை உருவாக்கினால், உங்களின் நுண்ணறிவு வளர்ந்து தெளிவு பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார். ஹெச்.எல்.இ. கிளாஸ்கோட் இயக்குனர் அமித் கல்ரா, ஓபன் நெட்ஒர்க் பார் டிஜிட்டல் காமர்ஸ் சி.இ.ஓ., தம்பி கோஷி ஆகியோர் பேசினர்.