கோவை: 'அரசியலமைப்பு சட்டத்தை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை' என்று பா.ஜ.,மாநில துணை தலைவர் கனகசபாபதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: நவம்பர் 26ம் தேதி ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட நாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலக அளவில் பல வகைகளில் தனித்துவம் பெற்று விளங்குகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக நம் நாடு விளங்கி வருவதற்கு அரசியலமைப்பு சட்டம் வழி வகுக்கிறது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி சிறந்து விளங்கி வந்ததை உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டம் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
நீதி என்பது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிகளை உள்ளடக்கியது. சுதந்திரம் என்பது பேச்சு, எழுத்து, வழிபாடு மற்றும் நம்பிக்கை பற்றிய அனைத்து விஷயங்கள் குறித்ததாகும். சமத்துவம் அனைவருக்குமான வாய்ப்புகளை உறுதி செய்கிறது. ஒவ்வொருவரும் சுய மரியாதையுடன் வாழும் உரிமையை சகோதரத்துவம் அளிக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பதும், பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.