திருப்பூர்: 'தரமான, சரியான அளவில் உணவு வழங்கும் விதமாக ரயில்களில் வழங்கப்படும் உணவு பட்டியலில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது' என, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலில் பயணிக்கும் ஏ.சி., படுக்கை வசதி, முன்பதிவு பயணிகளுக்கு இட்லி, உப்புமா, வெண் பொங்கல், வடை, பிரட் பட்டர், கட்லெட் ஆகியன உணவாக வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் புதிய உணவு வகைகளை சேர்க்க ஐ.ஆர்.சி.டி.சி., முடிவு செய்துள்ளது. ரயில்வே துறையினர் கூறியதாவது: ஒரே மாதிரியான உணவு என்பதால், பயணிகள் பலரும் விரும்புவதில்லை. இதனால், குழந்தைகள், பெரியவர்கள் விரும்பும் உள்ளூர், பண்டிகை கால உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகளை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய உணவு பட்டியலில் விலை உயர்வு இருக்காது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்குள் புதிய உணவு வகைகள் இருக்கும். உணவுகள் தரமானதாகவும், சரியான அளவிலும் வழங்க வேண்டும் என்பதால், அந்தந்த கோட்ட மற்றும் மண்டல அளவில் முடிவு எடுக்கப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.