கோவை: ''பார்சலில் வேதிப்பொருட்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும்,'' என, 'ஆன்லைன்' பொருள் விற்பனை நிறுவனங்களுக்கு, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.
கோவையில் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். அவரது வீட்டில் இருந்து ஏராளமான வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிபொருட்களை ஆன்லைன் இணையதளங்களில், ஜமேஷா முபின் கொள்முதல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆன்லைனில் வெடிபொருட்கள் விற்பனை மற்றும் டோர் டெலிவரிக்கு, 'செக்' வைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இணையதள நிறுவனங்களின் அலுவலர்கள், அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கூரியர் வினியோக ஏஜென்சியினர் பங்கேற்ற கூட்டம், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
ஆன்லைன் நிறுவனங்களின் வேதிப்பொருள் விற்பனையை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கிறது. குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களை தனித்தனியாக வாங்கி, அவற்றை ஒன்று சேர்த்து வெடிபொருட்களாக மாற்றி விடுகின்றனர். குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் பார்சலில் வந்தால், போலீசாருக்கு நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். பார்சல்கள் மீது சந்தேகம் வந்தாலே தெரிவிக்கலாம். யாருக்கேனும் சம்பந்தம் இல்லாமல் ஒரு பார்சல் வந்தாலும், அது பற்றி போலீசாருக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு கமிஷனர் பேசினார்.
கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், கோடவுன்களில் பொருட்களை இருப்பு வைத்து வினியோகம் செய்கின்றனர். உங்களது கோடவுன்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு முறை போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்யும் நடைமுறையை ஏற்படுத்தலாம். இத்தகைய குடோன் வைத்திருக்கும் நிறுவனங்களே, சொந்தமாக வெடிபொருள் கண்டறியும் மோப்ப நாயை வளர்க்கலாம். சந்தேகத்துக்குரிய பொருட்களை நீங்களே சோதனை செய்து கொள்ள முடியும்,'' என்றார்.