விருத்தாசலம் அருகே, பஸ்சுக்குள் புகுந்து அரசு பள்ளி மாணவர்களை, 25 பேர் கும்பல் தாக்கியதால் பதற்றம் நிலவுகிறது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன், நேற்று காலை 9:00 மணிக்கு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் வந்தது. காலை 9:20 மணிக்கு வயலுார் பஸ் நிறுத்ததில் பயணியரை ஏற்ற பஸ் நின்றது. அப்போது, அங்கிருந்த 25 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சில் ஏறி, பஸ்சில் பயணம் செய்த பள்ளி, கல்லுாரி மாணவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவனுக்கும், வயலுார் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கும் இடையே நேற்று முன்தினம் பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வயலுார் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அரசு பஸ்சில் ஏறி மாணவர்களை தாக்கியது தெரிந்தது. இதையறிந்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள், மாணவர்களை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரி, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின், அனைவரும் கலைந்து சாலையோரம் நின்றனர். அப்போது, மாணவர்களை தாக்கிய கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரை ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதை பார்த்த, வயலுார் பகுதியைச் சேர்ந்தவர்கள், இளைஞர்களை அழைத்துச் சென்ற போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, 25 பேர் மீது வழக்குப் பதிந்துள்ள போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். இரண்டு கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.