வேலுார்: சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்லும் பெங்களூரு மெயில் நேற்று இரவு 11:00 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மூன்று பெட்டிகளில் ஏ.சி., பழுதடைந்தது. இது குறித்து டிக்கட் பரிசோதகர்களிடம் பயணிகள் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்த ரயில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நள்ளிரவு 12:00 மணிக்கு வந்தது. அப்போது ஏ.சி., பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறங்கி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர். அரக்கோணம் ரயில்வே போலீசார் வார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் ஏ.சி., இயந்திரம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. காட்பாடி சென்றதும் முழுவதும் சரி செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர். இதனால் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு நள்ளிரவு 1:00 மணிக்கு ரயில் புறப்பட்டது.வேலுார் மாவட்டம், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இந்த ரயில் இன்று அதிகாலை 2:00 மணிக்கு வந்தது.
அங்கு ஏ.சி., முழுவதும் சரி செய்யப்பட்ட பின்னர் அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு சென்றது. இது குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: பெங்களூரு மெயில் புறப்படுவதற்கு முன்பே பெட்டிகளில் ஏ.சி., சரியாக வேலை செய்கிறதா என ரயில்வே பராமரிப்பு அதிகாரிகள் சரி பார்த்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அதை செய்யாததால், இரண்டு மணி நேரம் தாமதமாக பெங்களூருக்கு சென்றது. ரயில்வேயில் பராமரிப்பு பிரிவு இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. நாங்கள் என்ன ஓசியிலா செல்கிறோம். பணம் கொடுத்து தான் பயணம் செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.