சென்னை:தென் மண்டல பல்கலைக்கு இடையிலான பேட்மின்டன் போட்டி, பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலையில் கடந்த 21ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், காலிறுதி போட்டியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியும், கோட்டயம் எம்.ஜி., பல்கலை அணியும் மோதின. அதில், 2 - 1 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து நடந்த அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை 2 - 1 என்ற செட் கணக்கில், பெங்களூரு ஜெயின் பல்கலை அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் ஆந்திராவின் கர்னுால் பகுதியில் உள்ள ராயலசீமா பல்கலை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில், 2 - 0 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது.
அடுத்தடுத்த இடங்களை, ராயலசீமா பல்கலை, ஜெயின் பல்கலை, சென்னை பல்கலை அணிகள் பிடித்தன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், அகில இந்திய மற்றும் கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஆர்.எம்., மாணவியர். இடம்: பெங்களூர்.