சென்னை, நவ. 27-
சென்னையில், இரவு வேளைகளில் 'கட் சர்வீஸ்' பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
சென்னை மாநகரின் எல்லை விரிவாக்கத்தையடுத்து, செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர் என, புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
தினமும், இரவு 9:00 மணிக்கு பின், பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்து சேவை வெகுவாக குறைத்து இயக்கப்படுகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். அதேபோல், இரவு 8:30 மணிக்கே, பல்வேறு வழித்தடங்களில் மாநகர பஸ்கள் 'கட் சர்வீஸ்களாக' இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, வழித்தட எண்: 23சி அயனாவரம் - பெசன்ட் நகர் பேருந்து, கட் சர்வீசாக சைதாப்பேட்டை வரையிலும்; 18இ பிராட்வே - கூடுவாஞ்சேரி பேருந்து, கட் சர்வீசாக தாம்பரம் வரையிலும்; 18பி பிராட்வே - புழுதிவாக்கம் பேருந்து, ஆலந்துார் வரையிலும் இயக்கப்படுகின்றன.
அதேபோல், 54 பூந்தமல்லி - பிராட்வே பேருந்து, சைதாப்பேட்டை வரையிலும்; 26 பிராட்வே - அய்யப்பன்தாங்கல் பேருந்து வடபழநி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஒரே பஸ்சில் சென்று வந்த பயணியர், இரவு நேரங்களில் கட் சர்வீஸ்களாக இயக்கப்படுவதால், இரண்டு பேருந்துகளில் மாறி சென்று அவதிப்படுகின்றனர். பல நேரங்களில், மணிக்கணக்கில் அடுத்த பேருந்திற்காக காத்திருக்கு அவல நிலை உள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பயணியர் வருகை குறைவாக இருக்கும் வழித்தடங்களில் தான், ஓரிரு சர்வீஸ் 'கட் சர்வீஸ்' பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.
'பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில், கூடுதல் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.
புலம்பல்
சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளும் 'கட் சர்வீஸ்களாக' இயக்கப்படுகின்றன. இதனால், பணி முடித்து குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடிவதில்லை. கூடுதல் கட்டணம் கொடுத்து, தனியார் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலைமை தினமும் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நிலைமை மேலும் மோசமாகிறது.
-- பயணியர்.