சென்னை:சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.
இதில், தமிழக தபால் அணி, ரிசர்வ் வங்கி, மின் வாரியம் என, கிளப் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 36 அணிகள் மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டி ஒன்றில், அடையாறு யுனைடெட் ஹாக்கி கிளப் மற்றும் பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் இருந்தே, அடையாறு அணி ஆதிக்கம் செலுத்த துவங்கியது.
இதனால், முதல் பாதி நேரத்திலேயே அடையாறு அணியிர், 6, 9, 15, 16 மற்றும் 19வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தெறிக்கவிட்டனர்.
முடிவில், எதிரெணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல், 5 - 0 என்ற கோல் கணக்கில் அடையாறு அணி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த போட்டியில், ஹோம்லி ஹாக்கி கிளப் மற்றும் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின், முதல் பாதியின் முடிவில், 3 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியிலும், ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி அதிரடியாக விளையாடி, மேலும் ஐந்து கோல்களை குவித்து, 8 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.