மேடவாக்கம்:சென்னை, மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கத்தில், 'நாஞ்சில் டவர்ஸ்' என்ற அடுக்கு மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிக்கிறார், சங்கரநாராயணன், 52.
நேற்று மதியம் 12.15க்கு, இவர் வீட்டில், காஸ் சிலிண்டரில் இருந்து, எரிவாயு பெருமளவு கசிந்தது.
அதை நிறுத்த முடியவில்லை. உடனே, மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்தனர். வீடு முழுதும் நிறைந்திருந்த எரிவாயுவை தெளிப்பான் மூலம் அகற்றினர்.
பின்னர், காஸ் சிலிண்டரை சாலைக்கு கொண்டு வந்து, அதன் திறப்பானை சரி செய்து, எரிவாயு கசிவை நிறுத்தினர். தீயணைப்பு துறை வீரர்களின் துரித நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.