தாம்பரம்:தாம்பரம் அருகே செம்பாக்கம் நகைக்கடையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மூன்று சிறுவர்களை, இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கத்தில், 'ப்ளூ ஸ்டோன்' நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள், கடையை பூட்டிச் சென்றனர்.
நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் மொபைல் போனில் எச்சரிக்கை ஒலி அடித்தது.
சுதாரித்த அவர், நகைக்கடையில் கொள்ளை நடப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறிக்கைக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற சேலையூர் போலீசார், ஊழியர்கள் உதவியுடன் கடையை திறந்தனர். உள்ளே, பார்வையாளர்களை கவருவதற்காக கண்ணாடி அறையில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடி மதிப்பு தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரிந்தது.
உடனடியாக, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. கடையின் கண்காணிப்பு கேமராவின் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், ஒல்லியான உருவம் உடைய வாலிபர், தன் சட்டையால் முகத்தை மறைத்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த காட்சியை வைத்து, போலீசார் விசாரணையை துவக்கினர்.
இதில் செம்பாக்கம், சிவகாமி நகர், திருவள்ளூர் தெருவில் அறை எடுத்து தங்கியிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, செம்பாக்கம் சென்ற போலீசார், கொள்ளையனை பிடித்து நகைகளை மீட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட மற்றும் திட்டம் தீட்டிய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
சினிமா பாணியில், கடையின் பின்புறமுள்ள குழாய்களை பிடித்து, கொள்ளையன் மாடிக்கு ஏறியுள்ளான்.
அங்கு, மின்துாக்கி இயக்கப்படும் கட்டுமான கூரையை உடைத்து இறங்கிய கொள்ளையன், மின் துாக்கியின் கதவையும் லாவகமாக உடைத்து, கடையினுள் புகுந்துள்ளான்.
மாதிரிக்காக வைக்கப்பட்ட நகைகளை கொள்ளையடித்த பின், லாக்கரை உடைத்து நகைகளை திருட முயன்றுள்ளான். லாக்கரை உடைக்க முடியாததால், கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.
லாக்கரை அனுமதியின்றி திறந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் மொபைல் போனுக்கு எச்சரிக்கை ஒலி அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால், ஊழியர் ஜெகதீசன் மொபைல் போனுக்கு அதிகாலையில் அபாய ஒலி அடித்துள்ளது. அவர், பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசிய பின், போலீசாருக்கு தாமதமாக தகவல் தெரிவித்தார். எனினும், புகார் அளித்த இரண்டரை மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், நகைக்கடை அருகிலே ஜூஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளனர். நேரம் பார்த்து, நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.
எதுவும் தெரியாததுபோல், நகைக்கடை பகுதியில் திரிந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்ததில், நகைக்கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு கேட்கும் நபர்களின் அடையாள அட்டை சரிபார்த்து, முறையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே, வீடு, கடைகளை வாடகைக்கு விடவேண்டும்.
இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.