சென்னை:சென்னை, பேசின்பாலம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் சுசிலா. கர்ப்பிணியான இவர், பேருந்தில் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டு தப்ப முயன்ற ஜாபர் ஷெரிப் என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தார்.
இவரது துணிச்சலை பாராட்டி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மேலும், சென்னை, வடபழநியில் உள்ள சூர்யா மருத்துவமனை சார்பில், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்த பரிசு தொகையை, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில், சூர்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜிவ் ஸ்ரீகுமார் வழங்கினார். சூர்யா மருத்துவமனை தலைவர் ஸ்ரீகுமார், டாக்டர் ஆனந்தகுமார் உடனிருந்தினர்.
இது குறித்து, சூர்யா மருத்துவமனை தலைவர் டாக்டர் ஸ்ரீகுமார் கூறியதாவது:
கர்ப்பிணியாக இருந்தப்போதிலும், துணிச்சலாக தன் கடமையை செய்து, குற்றவாளியை ஓடி சென்று காவலர் சுசிலா கைது செய்துள்ளார்.
அவரது துணிச்சல் மற்றும் கடமை உணர்வை பாராட்டும் வகையில், சூர்யா மருத்துவமனை அவருக்கு பரிசு தொகை வழங்கி ஊக்குவித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சென்னை காவல் சிறார் மன்ற மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு, 'ஆசிரியரின் பங்கு' மற்றும் சீனியர் பிரிவு மாணவர்களுக்கு 'என் வாழ்க்கையில் ஆசிரியரின் பங்கு மற்றும் முக்கியத்துவம்' என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 210 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற எட்டு மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.