பல்லடம்:நாளை முதல் பாவு நுால் சப்ளை நிறுத்தப்படும் என, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் - கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், பல்லடம் தமிழர் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதன் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:
சீரற்ற பஞ்சு விலை காரணமாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் கொள்முதலை இழந்து வருகின்றனர். நிலையற்ற நுால் விலையால், துணி வர்த்தகம் பாதிக்கப்பட்டு துணிகள் தேக்கமடைகின்றன. மேலும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால், பிற மாநில சந்தைகளுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விலை உயர்ந்த துணிகளை வாங்க வர்த்தகர்கள் யாரும் முன் வராததால், அதிகப்படியான துணிகள் தேக்கமடைகின்றன. மேலும் துணிகளை உற்பத்தி செய்வதால், கூடுதல் இழப்பு ஏற்படும்.
எனவே, 28ம் தேதி (நாளை) முதல் விசைத்தறிகளுக்கான பாவு நுால் சப்ளை நிறுத்தப்படும். இரண்டு வாரத்துக்கு உற்பத்தியை குறைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சக்திவேல் கூறினார்.
ஏற்கனவே, 40 சதவீத உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. மின் கட்டண உயர்வு, பஞ்சு, நுால் விலை ஏற்ற இறக்கம் காரணமாக, ஜவுளி உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளது. விசைத்தறிகளின் இயக்கமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாவு நுால் சப்ளையை நிறுத்துவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால், விசைத்தறி தொழில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.