பல்லடம்:''விவசாயிகள், வன ஆர்வலர்களுக்கு மத்தியில் நாங்கள் மாட்டிக் கொண்டுள்ளோம்'' என, பல்லடத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு சுலோசனா காட்டன் மில் வளாகத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில், பசுமை தமிழகம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 33 சதவீதம் வனப்பரப்பு என்ற இலக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், 2.5 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற இலக்கு உள்ளது.
அடுத்த ஆண்டுகளில், 15 கோடி மற்றும் 25 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன், மரங்களை அடர்த்தியாக வளர்ப்பதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கெல்லாம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. ரோடு பணிகளின் போது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, 2 மடங்கு மரங்கள் நடப்படுகின்றன. அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள் பலவற்றிலும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தையே பசுமையாக்கும் திட்டம் உள்ளது. விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகிறோம்.
பயிர்களை தாக்கும் வன விலங்குகளை சுட வேண்டும் என விவசாயிகளும், வன விலங்குகளை எதுவும் செய்யக்கூடாது என வன ஆர்வலர்களும் கூறுகின்றனர். இருவருக்கும் நடுவில் நாங்கள் மாட்டிக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.