திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், வாகனங்கள் மூலம் முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது.
இந்த பணிகளை நேற்று காலை மேயர் தினேஷ்குமார், உதவி கமிஷனர் வாசுகுமார் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரித்து வரும் வாகனங்கள் முறையாக எடை அளவு செய்தும், குப்பைகள் ரோட்டில் பறக்காத வகையில், முறையாக மூடப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், குப்பை கொண்டு வரும் வாகனங்கள் விவரம் பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா; வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா; வாகனங்கள் வந்து செல்லும் நேரம் ஆகியன குறித்தும் கேட்டறிந்தனர்.
தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வரும் பாறைக்குழிகள் இன்னும் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும்; அடுத்த கட்டமாக அருகே தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் பாறைக்குழி குறித்த விவரங்கள் ஆராயப்பட்டது. அதில் குப்பை கொட்ட கேட்டுப் பெறும் நிலையில், அதில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் முறை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
வரும் ஆண்டில், மக்கும் குப்பைகள் முற்றிலும் மாற்று முறையில் பயன்படுத்தப்படும் நிலையில், மக்காத குப்பைகள் மட்டும் இந்த பாறைக்குழியில் கொட்டி நிரப்புவது என முடிவு செய்யப்பட்டது.
சிக்கியது சாயக்கழிவு வாகனம்
பாறைக்குழியில் மேயர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு நடந்த போது, பாறைக்குழியின் மற்றொரு பாதை வழியாக வந்த ஒரு டிராக்டர் வாகனம், சாயக்கழிவுகளைக் கொண்டு வந்து பாறைக்குழியில் கொட்டியது தெரிந்தது. உடனடியாக அந்த டிராக்டர் பறிமுதல் செய்து, மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. அதன் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.