திருவண்ணாமலை,-திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்காக, ஆவினில் இருந்து 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படவுள்ளது.
இதற்கு பயன்படுத்தப்படும், 3,500 கிலோ நெய், திருவண்ணாமலை ஆவின் வசம் கொள்முதல் செய்து, கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அதே சமயம், கோவில் நிர்வாகத்திடம் நேரடியாகவும், ஆன்லைனிலும், பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நேரடியாக நெய் காணிக்கை செலுத்த, கோவிலில் தனி கவுன்டர் உள்ளது.
மஹா தீபத்திலிருந்து சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மற்றவர்களுக்கு ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்.
வெள்ளோட்டம்
இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா ஏழாம் நாள் விழாவில் நடக்கும் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கவில்லை.
நடப்பாண்டு தேரோட்டம் நடக்கவிருப்பதால், ஐந்து தேர்களும் பழுது பார்க்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டன.
இதில் சுப்பிரமணியர் தேர் பீடத்தின் மேற்பகுதி சேதமானதால், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
திருக்குடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் தீபத்திருவிழாவின் பத்து நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை, மாலை, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.
இவ்வாறு வலம் வரும்போது, வாகனங்களில் பொருத்தப்படும் திருக்குடைகள், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஅருணாச்சாலா ஆன்மிக பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 திருக்குடைகள் மற்றும் அலங்கார சுருட்டிகள் தயாரிக்கப்பட்டன.
இவை, நேற்று எடுத்த வரப்பட்டு மாடவீதியில் வலம் வந்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.