வடலுார் : டலுாரில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில், என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளிகள் இருவர் இறந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன், 50; ஆண்டிக்குப்பம் சுகுமார், 45; இருவரும் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க ஒப்பந்தத் தொழிலாளிகள்.
வடலுார், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சந்திரகலா, 38; என்.எல்.சி., முதலாவது சுரங்க ஒப்பந்தத் தொழிலாளி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால், குறிஞ்சிப்பாடி அடுத்த ராசாகுப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி, சந்திரகலா வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று அதிகாலை முதல் ஷிப்ட் வேலைக்கு திருமுருகன் தனது ஹோண்டா ஷைன் பைக்கில் (டிஎன் 32 ஏசி 4282) சுகுமாரை அழைத்துக் கொண்டு, நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே போல், சந்திரகலாவும் வேலைக்கு ஸ்கூட்டி மொபட்டில் (டிஎன் 31 பிஆர் 2878) சென்று கொண்டிருந்தார்.
காலை 5:30 மணியளவில், வடலுார் அய்யன் ஏரி அருகே சென்ற போது, சிமென்ட் ஏற்றி வந்த ஈச்சர் லாரி (டிஎன்31 ஏவி 8961) எதிர்பாராத விதமாக பைக் மற்றும் மொபட் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில், திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சந்திரகலா, சுகுமார் ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் சந்திரகலா உயிரிழந்தார். சுகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து, வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விபத்திற்கு காரணம்
பெண்ணாடத்தில் இருந்து ஈச்சர் லாரியில் சிமென்ட் ஏற்றி வந்த டிரைவர், துாக்க கலக்கத்தில் இருந்ததுடன், அதிவேகத்தில் லாரியை ஓட்டி வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது.