சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே, விவசாயி ஒருவர் தனது வயலில் மூவேந்தர்களின் கொடிகள், தமிழக அரசின் சின்னம் ஆகியவற்றை வயல்களுக்கு நடுவில் கருப்புக் கவுனி நெல் நாற்றுகளால் வடிவமைத்துள்ளார்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர், விவசாயி செல்வம். இவர் ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் ரகம் ஒன்றைப் பயிரிட்டு, அதன் விதைநெல்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். 15 ஆண்டுகளாக இச் சேவையை செய்து வருகிறார்.
கருப்புக்கவுனி, பூங்காறு, சொர்ணமுகி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பயிரிட்டு, விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் செல்வம், மூவேந்தர்களை கவுரவிக்கும் வகையிலும், பாரம்பரிய நெல் ரகங்களை தமிழக அரசு மீட்டெடுக்க வலியுறுத்தியும் தனது வயலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வில்-அம்பு, புலி, மீன் கொடிகளையும், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் வடிவத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
பச்சை பசேலாக உள்ள நெல் வயல் நடுவில், இந்த வடிவங்களை பாரம்பரிய நெல் வகையான கருப்புக் கவுனி நாற்றுகளைப் பயன் படுத்தி அமைந்துள்ளார்.
இதை இப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
விவசாயி செல்வம் கூறுகையில், 'நமது பாரம்பரிய நெல் ரகங்கள் பல நோய்களை போக்கும் திறன் கொண்டவை.
இதனால், அவற்றை பயிரிட்டு, விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இவை 90 முதல் 180 நாட்களில் விளையக் கூடியவை. இவற்றை பயிரிட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறேன்.
இவற்றின் விதைநெல்களை மற்ற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதால், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்றார்.