சிதம்பரம், : தணிக்கை முடிந்த நகைகளை மீண்டும் சரிபார்ப்பது தொடர்பான நடவடிக்கையை கைவிட வேண்டும் என, சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை கடலுார் துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான ஜோதிக்கு, பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த 03.11.2022 கடிதம் வாயிலாக தங்கள் துறைக்கு எந்த பதிலும் அல்லது ஆட்சேபனை அனுப்ப போவதில்லை என்று தெரிவித்தோம். தங்கள் பார்வை 1ல் குறிப்பிட்ட கடிதம் 03.11.2022 பிறகு வந்துள்ளது. பொது தீட்சிதர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு 2005 முதல் 2022 வரையுள்ள நகை சரிபார்ப்புக்கு முன்பு ஒத்துழைப்பு தந்ததன் அடிப்படையிலும், எங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கவே 2005 பின் வரப்பெற்ற நகைகள் சரிபார்ப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தோம்.
நகைகள் சரிபார்ப்பு பணி கடந்த செப்., 28ம் தேதி முடிந்தது. அதில் குறைபாடு இல்லை என, அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
தணிக்கை முடிந்த நகைகளை மீண்டும் தணிக்கை செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகார வரம்போ, சட்ட ரீதியான உரிமையோ இல்லை. எனவே, நாளை 28ம் தேதி நகை சரிபார்ப்பு தொடர்பான நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.