போடி : போடி நகராட்சியில் வீட்டு வரி, காலியிட வரி வசூலில் பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதாக மக்கள் புகார் கூறுகின்றனர் இதனை தடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.
போடி நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி (தி.மு.க.,)தலைமையில் நடந்தது. கமிஷனர் செல்வராணி , துணைத்தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
மணிகண்டன் : வார்டுகளில் நகராட்சிக்கு சொந்தமான இடம் பயன்பாடின்றி உள்ளதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதில் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கடைகள் அமைத்து வாடகைக்கு விடவேண்டும். நகராட்சி பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக உள்ளது. இது பற்றி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. பூங்காக்களை சீரமைக்க வேண்டும்.
தலைவர் : நகராட்சி இடங்களை தேர்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரபாகரன் : 7வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இருக்கைகள் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாரண்யா : 24வது வார்டில் குடிநீர் வாரியம் தெருக்களில் புதிதாக பொருத்திய கேட்வால்வுகள் திருடப்பட்டுள்ளது.
கமிஷனர் : நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மணிகண்டன் : நகராட்சி எரியூட்டு மயான பராமரிப்பு பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வீட்டுவரி, காலி மனையிட வரி வசூலில் பணியாளர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
தலைவர் : விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தனலட்சுமி : தினசரி மார்க்கெட்டிற்காக 40 கடைகள் நகராட்சியில் கட்டப்பட்டது. முழுவதும் தனி நபர் ஒருவருக்கு மட்டும் நகராட்சி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இதற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனிநபர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதனால் கடையை நடத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
பிரபாகரன் : கோவை மாவட்டம், கூடலூர் நகராட்சியில் வசிக்கும் ராணுவம், சி.ஆர்.பி.எப்., வீரர்களை கவுரவிக்கும் வகையில் வீட்டு வரி, குடிநீர்வரி செலுத்த தேவையில்லை என தீர்மான நிறைவேற்றியுள்ளனர். இதை போல் போல போடியிலும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என்றனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.