விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பா.ம.க., நிர்வாகியை கொலை செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் ஆதித்யன், 45; பா.ம.க., மாவட்ட துணைச் செயலாளர். இவர், கடந்த 24ம் தேதி இரவு மண்டபம் அருகே வழி மறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கோலியனுாரைச் சேர்ந்த மெக்கானிக் ராகவன், 33; மதன், 20; கப்பியாம்புலியூரைச் சேர்ந்த ராமு, 45; குயில் என்கிற லட்சுமி நாராயணன், 41; வினோத், 33; விஷ்ணு, 40; பரந்தாமன், 31; ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் நேற்று 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த ஊராட்சித் தலைவர் தேர்தலில், ராமு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதில், அவருக்கு 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால், குடும்பத்துடன் வீட்டை காலி செய்து சென்னைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது நண்பர் வினோத் மகளின் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு கடந்த 22ம் தேதி கம்பியாம்புலியூர் வந்துள்ளார். அன்று இரவு, ராகவன், மதன், லட்சுமி நாராயணன், வினோத், விஷ்ணு, பரந்தாமன் ஆகியோருடன் பேசும்போது, தனது தேர்தல் தோல்விக்கும், கடந்த 2020ம் ஆண்டு தன்னிடம் வேலை செய்து, சாலை விபத்தில் இறந்த டிரைவர் பிரேம்குமார் இறப்புக்கும் ஆதித்யன் தான் காரணம். இதனால், ஆதித்யனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி 24ம் தேதி முதலில் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றுள்ளனர். அது தோல்வி அடைந்ததால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரும் விழுப்புரம், வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.