சிதம்பரம் : சிதம்பரம் அருகே, கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை இழுத்துச் சென்ற நிலையில், 4 மணி நேரத்திற்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வடக்கு வேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பக்கிரி மகன் திருமலை, 18. இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், வீட்டின் பின்புறம் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தண்ணீரில் இருந்து வந்த 15 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று, கரையோரம் குளித்துக் கொண்டிருந்த திருமலையின் கையை கடித்து, ஆற்றிற்குள் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறியடித்து கரையேறி, கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கம்பு மற்றும் கற்களை எடுத்து வீசி முதலையை தாக்கி, மாணவரை மீட்க முயன்றனர். அதற்குள் முதலை புதருக்குள் சென்று மறைந்தது. தகவல் அறிந்த அப்பகுதி உள்ளூர் மீனவர்கள் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படகு மூலம் ஆற்றில் இறங்கி, திருமலையை தேடினர்.
நான்கு மணி நேர தேடலுக்கு பின், இரவு 7:00 மணியளவில் இறந்த நிலையில் திருமலையின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிதம்பரம், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தொடரும் பலி
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இதுவரை முதலை கடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது போன்ற தொடர் சம்பவங்களாக இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முதலை பண்ணை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.