கூடலுார் : இயந்திர நெல் நடவு பணிக்கு வேளாண் துறையினர் வழங்கி வந்த மானியம் 2 ஆண்டுகளாக வழங்காததால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு பாய் நாற்றங்கால் அமைப்பதில் ஆர்வம் குறைந்தது.
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக சாகுபடி முடிவடைந்து தற்போது இரண்டாம் போகத்திற்கான நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்ப்பது, நடவு பணிக்காக வயல்களில் தொழி அடித்து சீரமைப்பது, நெல் நடவுப் பணிகள் என மும்முரமாக நடந்து வருகிறது.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நெல் நடவு, அறுவடை பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்வதற்கு பாய் நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்க்க வேண்டும். இதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறையினர் விவசாயிகளுக்காக மானியம் அறிவித்து இதற்கான ஆலோசனை வழங்கினர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடிந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இயந்திர நெல் நடவு பணிக்கு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் என வழங்கிய மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு பாய் நாற்றங்கால் அமைக்கும் பரப்பளவு மிக குறைந்தது.
ஜெயராமன், விவசாயி, கருநாக்கமுத்தன்பட்டி:
இயந்திர நடவுக்காக வேளாண்துறை வழங்கி வந்த மானியம் 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு சலுகையை அதிகரிக்காமல் குறைப்பதால் விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வேளாண் அதிகாரிகளும் விலை நிலங்களுக்கு வந்து ஆலோசனையும் வழங்குவதில்லை.
பூங்கோதை, வேளாண் உதவி இயக்குனர், கம்பம்:
இயந்திரங்களில் நடவு பணிக்கு இரண்டு ஆண்டுகளாக மானியம் இல்லை. இதற்கான இலக்கும் அறிவிக்கப்படவில்லை. அதனால் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இயந்திர நடவு பணிகள் மேற்கொள்ளலாம்.