காஞ்சிபுரம் : செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், கடவு எண்-29 பொன்னேரிக்கரையில், 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கபட்டு, வாகனப்போக்குவரத்து பயன்பாட்டிற்கு உள்ளது.மேம்பாலம் மீடியன் நடுவே, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில், காஞ்சிபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து, மேம்பாலம் நடுவில் வரை மின் விளக்குகள் ஒளிரவில்லை. மற்றொரு பகுதியான, மேம்பாலம் நடுவில் இருந்து, இந்திரா நகர் பகுதி வரை மின் விளக்குகள் ஒளிர்கின்றன.
இதனால், சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது என, இரு மாதங்களுக்கு முன் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி வெளியான ஒரு வாரம் மட்டுமே, மேம்பாலம் பகுதியில் மின் விளக்கு ஒளிர்ந்தது. அதன் பின் மின் விளக்கு ஒளிரவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே புகார் எழுந்துள்ளது.
எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில், இரவு நேரங்களில் தடையின்றி மின் விளக்குகள் ஒளிருவதற்கு, சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.