செய்திகள் சில வரிகளில்... ஈரோடு | ஈரோடு செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில்... ஈரோடு
Added : நவ 27, 2022 | |
Advertisement
 

சட்ட விழிப்புணர்வு முகாம்
கொடுமுடி: கொடுமுடியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் உயர்நிலை பள்ளியில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும், கொடுமுடி வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான லோகநாதன் தலைமை வகித்தார். இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் மகேஸ்வரி, சசி பங்கேற்றனர். அடிப்படை சட்டங்கள், போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்டம் குறித்து விளக்கினர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து
கொண்டனர்.

அவ்வையார் விருது பெற அழைப்பு
ஈரோடு: பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோரை ஊக்குவிக்க, உலக மகளிர் தினத்தில் தமிழக அரசு 'அவ்வையார் விருது' வழங்க உள்ளது. தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்டோர், சமூக நலன் சார்ந்த நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கையில் உள்ளோர், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணி செய்தோர் விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் தகுதியானவர்கள், https://awards.tn.gov.inல் தரவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். டிச.,10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், 'மாவட்ட சமூக நல அலுவலகம், 6வது தளம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
௪ சக்கர வாகனங்கள் ஏலம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீசாரால் கழிவு ஆணை பெறப்பட்ட, இரு நான்கு சக்கர வாகனங்கள் ஏலம், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. இதில் இரண்டு வாகனங்களும் ஜி.எஸ்.டி., வரி சேர்த்து, 1.௩௨ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. அத்தொகை வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டது.
பால்வள நாள் போட்டி
கோபி: தேசிய பால்வள நாள் மற்றும் டாக்டர் வர்கீஸ்குரியன் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோபி வைர விழா மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் ராதாக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்திய பால்வள சங்கத்தின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி போட்டியை துவக்கி வைத்தார். இதில் ஆறு முதல் பிளஸ் 2 வரை, 250 பேர் பங்கேற்றனர். வகுப்பு வாரியாக, முதல் மூன்று இடங்களில், வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அணைக்கு நீர்வரத்து சரிவு

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 2,923 கன அடியாக இருந்த நிலையில், 948 கன அடியாக நேற்று குறைந்தது. கீழ்பவானி வாய்க்காலில், 2,200 கன அடி நீர், அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 103.77 அடி, இருப்பு, 31.7 டி.எம்.சி.,யாக இருந்தது.
கோபியில் 296 பூத்களில் வாக்காளர் சிறப்பு முகாம்
கோபி, நவ. 27-
சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி வாரியாக, வாக்காளர் சிறப்பு முகாம், இரு நாட்கள் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோபி சட்டசபை தொகுதியில், 296 ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் என வாக்காளர்கள் விண்ணப்பம் அளித்தனர்.
ரூ.1.50 கோடிக்கு
கொப்பரை ஏலம்
பெருந்துறை, நவ. 27-
பெருந்துறையில், ௧.௫௦ கோடி ரூபாய்க்கு, கொப்பரை ஏலம் நடந்தது.
பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 3,536 மூட்டைகளில், 1.72 லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, ௮௪ ரூபாய் முதல், 91.25 ரூபாய்; இரண்டாம் தரம், 36.38 ரூபாய் முதல், 85.16 ரூபாய் வரை விலை போனது.
அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி துவக்கம்
ஈரோடு, நவ. 27-
நீட் தேர்வுக்கான பயிற்சி, ஈரோடு மாவட்டத்தில், 16 மையங்களில் நேற்று துவங்கியது.
அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர், தங்களை தயார் செய்து கொள்ளும் விதமாக, ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வுக்கான பயிற்சி நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 16 மையத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா, 50 பேருக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர் சீருடையுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இன்று காவலர்
எழுத்து தேர்வு
ஈரோடு, நவ. 2௭-
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், இரண்டாம் நிலை காவலர், சிறை துறை, தீயணைப்பு துறை ஆட்தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நந்தா பொறியியல் கல்லுாரி, கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, வேளாளர் கல்லுாரியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 மணி முதல் மதியம், 12:40 வரை தேர்வு நடக்கிறது. தேர்வெழுத, 957 பெண்கள், 4,963 ஆண்கள் என, 5,920 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நகராட்சி துப்புரவு
தொழிலாளர்களுக்கு பரிசு
காங்கேயம், நவ. 27-
காங்கேயம் நகராட்சியில், சிறந்த முறையில் துாய்மை பணியை மேற்கொண்ட துப்புரவு தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், ஏழு பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து மூர்த்திரெட்டிபாளையம் பகுதியில், துாய்மை பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ் கலந்து கொண்டார். வார்டு உறுப்பினர் ஜெயசித்ரா விஜய், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பு நாள்
உறுதிமொழி ஏற்பு
காங்கேயம், நவ. 27-
காங்கேயம் போலீஸ் நிலையத்தில் போலீசார் அனைவரும் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆண்டு தோறும் நவ.,26ம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பது வழக்கம். இதன்படி காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில், அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று நடந்தது. போலீசார் உறுதிமொழி
ஏற்றனர்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
காங்கேயம், நவ. 27-
தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, காங்கேயம் அருகே படியூர் அரசு பள்ளியில், காங்கேயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போதை ஒழிப்பு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சார்பு நீதிபதி ராஜா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி நாகலட்சுமி, குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரவீன் குமார் ஆகியோர், போக்சோ சட்டம் குறித்தும், சட்ட உதவி மையம் குறித்தும் பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தடுப்பணை கட்டும் பணியை
தொடங்கி வைத்த அமைச்சர்
காங்கேயம், நவ. 27-
காங்கேயம் தாலுகா வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில், 15.27 லட்சம் ரூபாய் மதிப்பில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தை திறந்து வைத்தும், 4.06 கோடி ரூபாய் மதிப்பில், வட்டமலைக்கரை ஓடை குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை, செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார், அதிகாரிகள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு
முகாமில் கலெக்டர் ஆய்வு
ஈரோடு, நவ. 27-
ஈரோடு மாவட்டத்தில், 2,222 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று நடந்தது. முகாமில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், பெயர் நீக்கம் போன்றவைகளுக்கான படிவங்கள் பெறப்படுகிறது. தவிர, வாக்காளர் பெயர்களை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணியும் நடக்கிறது. பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் நடந்த முகாமை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
துாய்மை தொழிலாளர் உறுதிமொழி ஏற்பு
தாராபுரம், நவ. 27-
துாய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் திட்டத்தில், தாராபுரம் காய்கறி மார்க்கெட் வளாகத்தில்,
நகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். நகராட்சி ஆணையர் ராமர் தலைமை வகித்தார். இதில் என் குப்பை, எனது பொறுப்பு என சுத்தம் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிறப்பாக பணி செய்த துாய்மை பணியாளர்களுக்கு, நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன் சான்றிதழ் வழங்கினார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
சாலை பராமரிப்பு
ஊழியர் மாநாடு
தாராபுரம், நவ. 27-
சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு, தாராபுரத்தில் நேற்று துவங்கியது. இதில் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாநில தலைவர் வைரவன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாநில தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X