கோவை:கோவைப்புதுார் அரசு பொது நுாலகத்தின், 55வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களிடையே பேச்சு போட்டிநடந்தது.
'மாணவர்களின் முன்னேற்றத்தில் நுாலகத்தின் பங்கு' என்ற தலைப்பில், கோவைப்புதுார் சி.பி.எம்., அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த, 30 மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டிக்கு தலைமை வகித்த நுாலகர் விஜயன் பேசுகையில், ''பள்ளியில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு நுாலகங்களை பயன்படுத்தும் பழக்கம் வர வேண்டும்.
அப்போதுதான் மேல் படிப்புக்கு செல்லும்போது, தேர்ந்தெடுத்து படிக்கும் துறையில் சிறந்து விளங்க முடியும்,'' என்றார்.
நுாலக வாசகர் வட்டம் தலைவர் நம்பி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நுாலகத்தை அதிகமாக பயன்படுத்தும் மாணவர்களுக்கு, பள்ளி ஆண்டு விழாவில் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
சி.பி.எம்., சகுந்தலா வித்யாலயா அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் யுவராஜா, தமிழாசிரியர் விசாகமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.