உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாளும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில், போடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், நுாற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி நிறுவனங்கள், காகித ஆலை, தீவன உற்பத்தி நிறுவனங்கள் என, தொழில் நிறுவனங்கள் அதிகளவு உள்ளன.
மேலும், காற்றாலை, பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில்களும், அதிகரித்துள்ளன. பிற மாநிலங்களில், இருந்து உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருளான பருத்தி, மக்காச்சோளம் மற்றும் இதர சரக்குகள் லாரிகள் உட்பட சரக்கு வாகனங்கள் வாயிலாகவே கொண்டு வரப்படுகிறது.
தொழில் வளர்ச்சி மிகுந்த இப்பகுதியில், பிற பகுதிகளில் இருந்து, ரயில்வே வாயிலாக, சரக்குகளை பெறவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு அனுப்பவும், பல தொழில்நிறுவனங்கள், சிறு, குறு தொழில் முனைவோர் தயாராக உள்ளனர்.
வர்த்தக மேம்பாட்டு குழு
இந்நிலையில், கடந்த, 2020ல், தெற்கு ரயில்வே சார்பில், சரக்கு வர்த்தகத்தை அதிகரிக்க, வர்த்தக மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில், கருத்துக்கேட்பு, கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இத்தகைய வர்த்தக மேம்பாட்டு குழுவினர், உடுமலை வியாபாரிகள் சங்கம், உர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சில தொழில்துறையினர் சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதன்படி, விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதிக்கு, பிற மாநிலங்களில், இருந்து லாரிகள் வாயிலாகவே, உரங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சீசன் சமயங்களில், குறித்த நேரத்துக்கு, உரங்களை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதே போல், நுாற்பாலை, காகித ஆலை நிர்வாகத்தினரும், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், விரைவில், சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; உடுமலை பகுதியிலுள்ள, முக்கிய கோழி தீவன உற்பத்தி நிறுவனத்தினர், மக்காச்சோளம், சோயா ஆகிய மூலப்பொருட்களை, உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வாயிலாக, கையாள தயாராக உள்ளது குறித்தும், அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட, ரயில்வே அதிகாரிகள் குழுவினர், விரைவில், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.
நடவடிக்கை இல்லை
விவசாயிகள் தேவைக்காக, காய்கறிகள், விவசாய விளைபொருட்களை அனுப்ப, 50 சதவீத கட்டண சலுகை உள்ளது. விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், குளிரூட்டப்பட்ட ரயில்பெட்டிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. விரைவில், இத்திட்டத்தை செயல்படுத்த, மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சீரமைப்பு தேவை
உடுமலை ரயில்வே ஸ்டேஷன், கோமங்கலம், முக்கோணம் பகுதியில், சரக்குகள் இறக்கி பாதுகாப்பாக வைக்கும் வகையில், முன்பு, 'கூட்ஸ் ெஷட்' அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திலுள்ள, சரக்கு இருப்பு வைக்கும் குடோன் பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருவதோடு, சுற்றிலும் முட்செடிகள், மரங்கள் முளைத்து காணப்படுகிறது.
பாழடைந்து வரும், குடோன்களை சீரமைக்கவும் உடனடி நடவடிக்கை தேவையாகும்.