உடுமலை:பஞ்சலிங்க அருவி கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் பணியாளர்களுக்கு, வாக்கிடாக்கி உபகரணம், கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பிரசித்தி பெற்ற பஞ்சலிங்க அருவி உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து, 900 மீ., உயரத்தில், வனப்பகுதியில், இந்த அருவி அமைந்துள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள, சிற்றாறுகள் வாயிலாக அருவிக்கு நீர் வரத்து கிடைக்கிறது. அடிவாரத்தில் மழை இல்லாவிட்டாலும், மலைப்பகுதியில், மழை பெய்யும் போது, அருவியில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
இவ்வாறு கடந்த, 2008ல், அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளித்து கொண்டிருந்த, 13 சுற்றுலா பயணியர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
இதையடுத்து, சுற்றுலா பயணியர் பாதுகாப்புக்காக, அருவி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தற்போது வரை இழுபறி நீடிக்கிறது.
மழைக்காலத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், கண்காணிப்பு பணிகளுக்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருவியில் அத்துமீறல்களை தடுத்தல், கண்காணிப்பு செய்வது உள்ளிட்ட பணிகளில், இந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அருவியின் நீர் வரத்து உள்ளிட்ட விபரங்களை, உடனடியாக மலை அடிவாரத்திலுள்ள கோவில் அலுவலகத்துக்கும், அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிப்பதில் சிக்கல் இருந்தது.
தற்போது, இப்பிரச்னைக்கு தீர்வாக கோவில் சார்பில், கண்காணிப்பு பணியில், ஈடுபட்டுள்ள, 5 பணியாளர்களுக்கு வாக்கிடாக்கி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட இடைவெளியில், அடிவாரத்திலுள்ள கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அருவியின் நிலவரம் உள்ளிட்ட தகவல்களை பணியாளர்கள் தெரிவிக்க முடியும்.