உடுமலை:உடுமலை அருகே, விளைநிலத்தில், பழங்கால கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பகுதியினரால், பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்தனர்.
உடுமலை திருமூர்த்திமலை அருகே, மலையடிவாரத்தில், அமைந்துள்ள பகுதி பொன்னாலம்மன் சோலை.
அப்பகுதியைச்சேர்ந்த, விவசாயி ஜெயக்குமார், விளைநிலத்தில், கட்டுமான பணிகளுக்காக, குழி தோண்டும் போது, 10 அடி ஆழத்தில், கற்சிலை தென்பட்டுள்ளது.
இதையடுத்து, வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், நேற்று சிலை குறித்து ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: பொன்னலாம்மன்சோலை பகுதியில் கிடைத்த, கற்சிலை ஆய்வு செய்யப்பட்டது. இச்சிலை சுமார் ஆயிரம் காலத்திற்கு முற்பட்ட அம்மன் (கொற்றவை) வழிபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
அதற்கு பூதேவி, பார்வதிதேவி எனும் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். கற்சிலையின் மார்பில் அழகான கச்சை; கழுத்தில் அட்டிகை போன்ற நல்ல ஆபரணங்கள் உள்ளது.
இது பிற்காலத்தில் பெண் தெய்வ வழிபாட்டிற்காக போற்றப்பட்டு வந்த சிவகாமசுந்தரி, அழகு நாச்சியம்மன், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம்.
இந்தக் கற்சிலை, இரண்டடி உயரத்தில், அரை அடி அகலத்தில் மிகவும் அற்புதமான கலை வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
பொன்னாலம்மன் சோலை எனும் இடத்தில் பெண் தெய்வ வழிபாடு இருந்ததையும், இங்கு மக்கள் தாய்த்தெய்வ வழிபாட்டை வலியுறுத்தும் வகையில், கிராமத்துக்கு இந்த பெயர் அமைந்துள்ளது. மக்கள் வழிபாட்டில் இந்த சிலை இருந்துள்ளது.
ஏற்கனவே, நடத்தப்பட்ட ஆய்வில், திருமூர்த்தி அணையிலிருந்து மேற்கே செல்லும் பாலாற்றங்கரையில் கோவில்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பெண் தெய்வம், அரசி வழிபாடு, பூதேவி வழிபாடு, அங்காளம்மன், அழகு நாச்சியம்மன் வழிபாடு எனப் பெண் தெய்வ வழிபாடு இருந்தது கள ஆய்வில், தெரியவந்தது.
திருமூர்த்திமலை பகுதி என்பது சங்ககாலத்தில் உம்பற்காடு எனவும், பழமையான ஆதிகுடிகளின் தொன்மையான தாய்த்தெய்வ வழிபாடு அங்கு இருந்ததையும், இந்த கற்சிலை உறுதிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் வரலாற்று பேராசிரியர் ராபின் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.