உடுமலை:வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது. இதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு பணி, கடந்த ஆக., மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்ட சபை தொகுதிகளில், 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர் உள்ளனர்.
உடுமலையை பொறுத்தமட்டில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மொத்த வாக்காளர்களில், 48 சதவீத வாக்காளர் மட்டுமே, ஆதார் இணைத்துள்ளனர்.
ஆதார் இணைப்பில் இம்மாவட்டம், பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கிடையே ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். எட்டு தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பில் பின்தங்கிய பகுதிகளைச்சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலு வலர்கள் பங்கேற்றனர்.
'வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதத்தை உயர்த்தவேண்டும்,' என, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.டி.ஆர்.ஓ., ஜெய்பீம், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களும், தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில், சேர்த்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் வருவாய்த்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.