உடுமலை:அரசுக்கல்லுாரிகளில், மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், அரசு ஊழியர் சங்கத்தின், 6 வது மாவட்ட பேரவைக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ராணி தலைமை வகித்தார்.
இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்விடுப்பு ஊதியத்தை நிலுவையுடன் வழங்கவும், அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
பட்டுத்தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு, உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளுக்கு, கிலோவிற்கு ரூ.100 ஊக்கத்தொகையாக வழங்கவும், பஞ்சு விலையை குறைத்து, நெசவுத்தொழிலை பாதுகாக்க வேண்டும்.
உடுமலை , பல்லடம், அவினாசி அரசு கலைக்கல்லுாரியில் மாணவ, மாணவியர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கவும், உடுமலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, உடுமலை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து பேரவைக்கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபம் வரை பிரதிநிதிகள் ஊர்வலமாக வந்து, மறைந்த மாவட்ட துணைத்தலைவர் அன்வருல்ஹக் உள்ளிட்டவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில், மாநிலத் துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் ராமன், மாவட்டப்பொருளாளர் முருகசாமி, நிர்வாகிகள் பரமேஸ்வரி, ராமசாமி, பாக்கியம், மேகலிங்கம், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.