பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தந்தையை வெட்டிக்கொலை செய்து தலைமறைவான மகனை, போலீசார் தேடுகின்றனர்.
பொள்ளாச்சி, பூசாரிப்பட்டி கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம்,50. இவர் மனைவி சித்ராதேவி, மகன் பிரியதர்ஷன் என்கிற கார்த்திக், 24, உடன் வசித்து வந்தார்.
கார்த்திக், சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டுகிறார். நேற்று பூசாரிப்பட்டி மதுக்கடை முன், தந்தையை அரிவாளால் வெட்டி விட்டு, கார்த்திக் தப்பியோடினார். சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அங்கிருந்தவர்கள் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிவலிங்கத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது:
கூலித்தொழிலாளியான சிவலிங்கம், தினமும் குடி போதையில் மனைவி சித்ராதேவியிடம் தகராறு செய்துள்ளார். தாயிடம் தகராறு செய்யக்கூடாது, என, கார்த்திக் எச்சரித்துள்ளார். ஆனால், அதை கேட்காமல் தினமும் மது குடித்து தகராறு செய்துள்ளார்.
நேற்று மதியம் சிவலிங்கம் மதுக்கடைக்கு சென்றதால், கோபமடைந்த கார்த்திக், தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தலைமறைவான கார்த்திக்கை தேடுகிறோம்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.