பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில், குப்பைகளில் கிடக்கும் உணவுகளையும், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் கால்நடைகள் உட்கொள்கின்றன. இதனால், அவற்றுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சியில், விவசாயத்துக்கு அடுத்த படியாக கால்நடை வளர்ப்பு முக்கியத்தொழிலாக உள்ளது. நகரப்பகுதிகளில் கால்நடை வளர்ப்போர், மேய்ச்சலுக்காக கால்நடைகளை ரோடுகளில் அவிழ்த்து விடுகின்றனர்.
நகரப்பகுதிகளில் விளைநிலங்கள் இல்லாத சூழலில், கான்கிரீட் கட்டடங்கள் மட்டுமே உள்ளன. ரோட்டோரத்தில் உள்ள புல், புதரில் மேய்கின்றன. ஆனாலும், கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைக்காததால், அலைமோதுகின்றன.
வேறு வழியில்லாமல், குப்பையில் வீசப்படும் மீதமான உணவுகள், காய்கறி, பழங்களை உட்கொள்கின்றன. அவற்றை உட்கொள்ளும் போது தவறுதலாக பாலித்தீன் கவர்களையும் உட்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
ஆடுகள், சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை உட்கொண்டு பசியாற்றுகின்றன. இதனால், அவற்றுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. பாலித்தீன் உட்கொள்வதால், கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்நடை வளர்ப்போருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகருக்குள் கால்நடைகளை சுற்ற விடக்கூடாது என, அவற்றின் வளர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கால்நடைகளை அவிழ்த்து விடுவதால், குப்பையில் உணவு தேடுகின்றன. இதனால், அசம்பாவிதமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.