கிண்டி--மனைவியை அபகரித்த ஆத்திரத்தில், துாங்கிக் கொண்டிருந்த நண்பரை கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன், 30. இவரது மனைவி சந்தியா, 29. தம்பதிக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக, இரு ஆண்டுகளுக்கு முன் பாண்டியனை விட்டு பிரிந்து சென்ற சந்தியா, செம்மஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திக், 30, என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன் இருவரும், கிண்டி ஐந்து பர்லாங் சாலை பேருந்து நிறுத்தத்தில் தங்கி, குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தினர்.
நேற்று காலை, கார்த்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக, கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சந்தியாவிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பாண்டியன், கார்த்திக் இருவரும் நண்பர்கள். கருத்து வேறுபாடால் பாண்டியனிடம் இருந்து பிரிந்து சென்ற சந்தியா, கார்த்திக்குடன் வாழ்ந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன், மீண்டும் கணவர் பாண்டியனிடம் சென்றுள்ளார். இது தெரிந்து கார்த்திக் பிரச்னை செய்ததால், கார்த்திக்குடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துச் சென்றதாக ஆத்திரத்தில் இருந்த பாண்டியன், கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, போதையில் துாங்கிய கார்த்திக்கை, பாண்டியன் மற்றும் அவரது நண்பர் பாஸ்கரன், 42, ஆகியோர் சேர்ந்து, பிளேடால் சரமாரியாக கிழித்து கொலை செய்துள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.