கொலை மிரட்டல் விடுத்தவருக்கு வலை
வெங்கல்: சென்னை, கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35. கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வேலைக்கு மனு செய்தார். அப்போது வெங்கலில் உள்ள தனியார் தொழிற்சாலையின் மேலாளர் அலோகாகர்வால், ராஜேைஷ தொடர்பு கொண்டு ௧ லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி ராஜேஷ், பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் வேலை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ராஜேஷ், தனியார் அலுவலகம் சென்று பணத்தை கொடுங்கள் அல்லது வேலை கொடுங்கள் என கூறியுள்ளார்.
இதற்கு அலோகாகர்வால், வேலை இல்லை வெளியே செல், இல்லையெனில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து ராஜேஷ், வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
மணல் கடத்திய பைக் பறிமுதல்
வெங்கல்: வெள்ளியூர் கிராமத்தை ஒட்டி, கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மணல் கடத்துவது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். ஆற்றில் இருந்த மூன்று பைக்குகளை சோதனை செய்ததில், அதில் மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. பைக்கை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.