திருவாலங்காடு, நவ. 28--
சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூரை அடுத்து அமைந்துள்ளது, திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில், மொத்தம், நான்கு நடைமேடைகள் உள்ளன.
இவற்றில், 3 மற்றும் 4ம் நடைமேடைகளில், பெரும்பாலும் விரைவு, சரக்கு ரயில்கள் செல்கின்றன.
இங்கு, முதல் நடைமேடையில், அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில்களும், இரண்டாம் நடைமேடையில், சென்னை செல்லும் புறநகர் ரயில்களும் நின்று செல்கின்றன.
இந்த ரயில்கள் வாயிலாக, ஒருநாளைக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாவது நடைமேடையில் கழிப்பறை வசதி இல்லாமலும், முதல் நடைமேடையில் கழிப்பறை மூடியும் வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பயணியர் சிரமப்படுகின்றனர்.
மேலும், புதிதாக அமைக்கப்பட்ட 3, 4 நடைமேடைகளில், கழிப்பறை வசதி உள்ளது. அங்கு சென்று பயன்படுத்துவதில், பயணிருக்கு சிரமம் உள்ளது.
எனவே, 2வது நடைமேடையில் கழிப்பறை வசதி செய்து தரவும், முதல் நடைமேடையில் உள்ள கழிப்பறையை, பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.