கோவை: சமீப காலமாக, வீட்டில் இருந்தபடியே பென்சில் பேக்கிங் செய்து சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம், பல்வேறு சமூக ஊடக குழுக்களில் பதிவிடப்படுகிறது.
'அட...பென்சில் அடுக்கும் வேலைதானே...அதுக்கு இவ்வளவு சம்பளமா' என நினைத்து, இப்பதிவிற்கு பலர் ஆர்வம் தெரிவித்து, பலர் கருத்து பதிவிடுவதை காணமுடிகிறது.
வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளும் நபர்களிடம், 'பென்சில் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள் அனுப்பும் போது முன்பணம், 10 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும். மாதம் பென்சில் பேக் செய்தால், 30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும், விருப்பமான நேரத்தில் பணி செய்து கொள்ளலாம்' என மூளை சலவை செய்கின்றனர்.
அப்புறம்தான் வேலையை காட்டுகின்றனர். செயல்பாட்டு கட்டணமாக, ரூ.600 முதலில் செலுத்த வேண்டும் என்று மெல்ல அவிழ்த்து விட்டு அத்தொகையை பெற்றுக்கொள்கின்றனர். அத்தோடு சரி; அந்த எண்ணை 'பிளாக்' செய்து விடுகின்றனர்.
பல நுாறு பேரிடம் அறுநுாறு!
தொகை சிறிது என்பதால், பலர் நொந்து கொண்டு கடந்து விடுகின்றனர். ஆனால் பல நுாறு பேரிடம் ரூ.600 எனும்போது, இது பெரிய மோசடி. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான, இல்லத்தரசி மஞ்சுமாலினி கூறுகையில், ''குழந்தைகள் இருப்பதால், முழுநேர வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், பென்சில் பேக்கிங் விளம்பரத்தை, முகநுாலில் பார்த்து வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டேன். பணி சார்ந்த விபரங்களை கூறிவிட்டு, 'செயல்பாட்டு கட்டணமாக, ரூ.650 செலுத்த வேண்டும்; அந்த பணத்தில் 600 ரூபாய், முதல் சம்பளத்துடன் திருப்பி அளிக்கப்படும்' என தெரிவித்தனர்.
அத்துடன் ஆதார், பான் கார்டு ஜெராக்ஸ் கேட்டனர். தொகை குறைவு, வேலை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் கொடுத்து விட்டேன். அதன் பிறகு, என் நம்பரை 'பிளாக்' செய்து விட்டனர். தொகை குறைவு என்பதால் யாரிடமும் கூறவில்லை. ஆதார், பான் கார்டு நகல் வைத்து, என்ன செய்வார்களோ என்ற அச்சம் எப்போதும் உள்ளது,'' என்றார்.
இது குறித்து, போலீசார் கூறுகையில், 'மக்களின் ஆசையை துாண்டி விட்டே பல மோசடிகள் நடக்கின்றன. பகுதி நேர வேலை என்று, பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் குற்றங்களும் நடக்கின்றன. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.