சென்னை குடிநீர் வாரியத்தில் வணிக பயன்பாட்டை மறைத்து, வீட்டு பயன்பாட்டுக்கான வரி செலுத்தி முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க, மின்வாரிய கணக்குடன் ஒப்பீடு செய்யும் பணி நடக்கிறது. தற்போது, 10 ஆயிரம் நுகர்வோரிடம் நடத்திய ஆய்வில், 10 சதவீதம் பேர் வணிக பயன்பாட்டை மறைந்து வரி செலுத்தியது அம்பலமானது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வாரியத்திற்கு வருவாய் அதிகரித்ததால், அனைத்து வணிக பயன்பாட்டு கட்டடங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர், கழிவுநீரை பொறுத்தமட்டில் வீட்டு இணைப்பு, வணிகம் சார்ந்த இணைப்பு மற்றும் தற்காலிக இணைப்பு வழங்கப்படுகிறது.
கட்டடம் கட்ட 'பிளான்' வாங்கும் போது, சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தி, புதிய இணைப்பு வாங்க வேண்டும். ஆனால் சிலர் வங்கிக் கடன், சொத்து பரிமாற்ற தேவைக்காக புதிய இணைப்பு வாங்கிய பின், முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணம் செலுத்துவர். அடுத்து, பழைய கட்டடத்தின் ரசீதை வைத்து வரி, கட்டணம் செலுத்தி, புதிய வீட்டுக்கு நிர்ணயித்த கட்டணத்தை மறைத்து விடுவர்.
இதில், ஒரே வீட்டு முகவரியில் இரண்டு வரி எண்கள் பதிவாவதால், வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், வீட்டுக்கு இணைப்பு பெற்ற பின், வீட்டின் ஒரு பகுதி அல்லது முழுதையும் வணிக பயன்பாட்டுக்கு விடுவர். அப்போது குடிநீர், கழிவுநீர் இணைப்பை வணிக பயன்பாட்டுக்கு மாற்றாமல், வீட்டு பயன்பாடு எனக் கூறி தொகை செலுத்துவர். இதிலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை கண்டுபிடிக்க, குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியின் வரி மதிப்பீட்டை வைத்து, குடிநீர் வாரியம் வரி நிர்ணயம் செய்கிறது.
துல்லியமான விவரம், குடிநீர் வாரியத்திடம் இல்லை. ஆனால், மின் வாரியத்திடம் நுகர்வோர் விவரம், 99 சதவீதம் துல்லியமாக இருப்பதாக, குடிநீர் வாரிய கருதுகிறது.
இதனால் சோதனை அடிப்படையில், மின்வாரியத்தில் உள்ள வணிகம் மற்றும் பகுதி வணிகம் சார்ந்த 36 ஆயிரத்து 740 நுகர்வோரின் முகவரியை வாங்கி, குடிநீர் வாரிய நுகர்வோரின் பயன்பாட்டுடன் ஒப்பீடு செய்யும் பணி, கடந்த மாதம் துவங்கியது. இதில், பலர் முறைகேட்டில் ஈடுபட்டு, குடிநீர் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிந்தது.
மொத்தம், 10 ஆயிரம் பேர் பயன்பாட்டை ஒப்பீடு செய்ததில், 1,121 பேர் வணிக பயன்பாட்டை மறைத்து, வீட்டு பயன்பாட்டில் வரி செலுத்தியது தெரிந்தது. இவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மின்வாரியத்தில் எப்போதிருந்து வணிக பயன்பாட்டில் உள்ளதோ, அப்போதிருந்து வணிக அடிப்படையில் வரி செலுத்த வலியுறுத்தப்பட்டது. இதன்படி, ஒப்பீடு பணி முடிந்த மணலி மண்டலத்தில், 10 பேரிடம் இருந்து 1.60 லட்சம் ரூபாயும், மாதவரம் மண்டலத்தில் 8 பேரிடம் இருந்து, 99 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
மொத்தம் மூன்று மண்டலங்களில், 100 சதவீதம் ஒப்பீடு பணி முடிந்தது. பருவமழையால் அம்பத்துார், கோடம்பாக்கம், ஆலந்துார் உள்ளிட்ட மண்டலங்களில், ஒப்பீடு பணி மந்தமாக நடந்தது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வாரியத்திற்கு வர வேண்டிய வருவாய் அதிகரித்து உள்ளதால், ஒப்பீடு பணியை தொடர, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுவரை நடத்திய ஒப்பீட்டில், 10 சதவீதம் பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, வணிகம் சார்ந்த வரியை வசூலிக்கிறோம். தற்போது, 36 ஆயிரம் பேரின் கணக்கை தான் ஒப்பீடு செய்கிறோம். மொத்தத்தில் ஒப்பீடு செய்யும் போது, பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மழையால், ஒப்பீடு பணி பாதிக்கப்பட்டது. மீண்டும், பணியை தொடர்கிறோம். மழைநீர் சேகரிப்பு கணக்கெடுப்பு நடத்தும் களப்பணியாளர்கள் வழியாகவும் ஆய்வு நடக்கிறது. பொதுமக்கள் தானாக முன்வந்து, வணிக பயன்பாட்டு வரியை செலுத்த வேண்டும். - குடிநீர் வாரிய அதிகாரிகள்