சென்னை: உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரையாக மெரினா உள்ளது. கடல் அலையை கண்டுகளிக்க, 820 அடி நீளத்திற்கு மேல் மணலில் நடந்து செல்ல வேண்டிஉள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் கடற்கரையின் அழகை ரசிக்க முடியாத நிலை நீடித்து வந்தது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மாற்றுத்திறனாளிகள் சாலையில் இருந்து கடலுக்கு செல்வதற்கு தற்காலிக சாலை அமைத்து வழி ஏற்படுத்தப்பட்டது. இது மாற்றுதிறனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை நிரந்தரமாக மாற்ற வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ், 1.14 கோடி ரூபாய் செலவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இது, 'நம்ம சென்னை - செல்பி பாயின்ட்' பின்புறம் மரப்பலகைகளை பயன்படுத்தி 862 அடி நீளம், 9 அடி அகலம், மணலில் இருந்து 3 அடி உயரத்திற்கு இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த சிறப்பு பாதை வழியாக, மாற்றுத்திறனாளிகள் பலரும் நேற்று சென்று வங்க கடலின் பெரும் இரைச்சல் கேட்டும், அலையின் ஆர்ப்பரிப்பை பார்த்தும் ரசித்தனர்.
கடல் அருகே சென்று, அழகை ரசிக்க முடியுமா என ஏங்கிய நாட்களுண்டு. இப்போது அந்த குறை நீங்கியது. நடைபாதை கைப்பிடியை பிடித்து சென்று, கடல் அழகை ரசித்தது மறக்க முடியாதது. தமிழக அரசுக்கு நன்றி.
-காமாட்சி, மாற்றுத்திறன் மூதாட்டி
கடற்கரை வரைக்கும் சென்று, கடல் அழகை ரசிக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இது போன்று இல்லை. இந்த நடைபாதைக்காக பல ஆய்வு மேற்கொண்டோம். சக்கர நாற்காலியில் செல்வோரைவிட, தாங்கி நடப்போருக்கு ஏதுவாக, சிறப்பாக கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது. மக்களோடு மக்களாக மாற்றுத்திறனாளிகளும் இனி, கடல் அழகை ரசிக்க முடியும்.
-ஸ்மிதா, ஊனமுற்றோர் உரிமைகள் இணையம், தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகி