திருப்பூர் : ரயில் பயணிகள் வசதிக்காக நிஜாமுதீன், பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் அதிவிரைவு ரயில்களில் எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
நிஜாமுதீன், பாட்னா ரயில்களில், இந்தப்பெட்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. டிச., இரண்டாவது வாரத்தில் திருவனந்தபுரம் ரயிலிலும் இணைக்கப்படுகிறது.
பயன் என்ன?
ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாராகி வரும் எல்.எச்.பி., எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட துார, அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது. சாதாரண ரயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.
பிற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால், அதிவேகமாக இயக்க சவுகரியமாக இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 'டிஸ்க்பிரேக் சிஸ்டம்' இணைக்கப்படுவதால், வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின்போது ஒரு பெட்டி மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது.