மீஞ்சூர்: தச்சூர்- - பொன்னேரி- - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல், விபத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.தொடர் புகார்களை தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலையில் பயணிக்க தடை விதித்து, சப் - -கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டிருந்தார்.நேற்று காலை முதல், தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மீஞ்சூர்- - வண்டலுார் சாலை சந்திப்பில், நேற்று காலை முதல், செங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் மேற்கண்ட சாலையில் செல்ல முயன்ற கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.எண்ணுார் துறைமுகம் மற்றும் அத்திப்பட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து, பொன்னேரி நோக்கி வந்த வாகனங்கள், மீஞ்சூர்- - வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.மீஞ்சூர்- - இலவம்பேடு இடையே உள்ள கன்டெய்னர் கிடங்குகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், மதியம் 12:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது.காலை 6:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை கிடங்குகளுக்கு செல்வதற்காக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்த வந்த கனரக வாகனங்கள், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தடுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.மதியம் 12:00 மணி முதல், -மாலை 4:00 மணி வரை போலீசார் ஆவணங்களை சரி பார்த்து அவற்றை கன்டெய்னர் கிடங்குகளுக்கு செல்ல அனுமதித்தனர். தச்சூர் கூட்டுரோடு பகுதியிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால், கார், பைக், பள்ளி வாகனங்கள் நேற்று சிரமமின்றி பயணித்தன.