ஊத்துக்கோட்டை,--வினாடிக்கு, 35 கன அடி வீதம் சாய்கங்கை கால்வாயில் வந்து கொண்டு இருந்த கிருஷ்ணா நீர் தற்போது, 424 கன அடி வீதம் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது.கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாய் வழியே, 152 கி.மீ., துாரம் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 'ஜீரோபாயின்ட்'டை கிருஷ்ணா நீர் வந்தடையும். பின்னர் அங்கிருந்து, 25 கி.மீ., துாரம் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை அடையும்.ஒப்பந்தப்படி, ஜனவரி -- ஏப்ரல் மாதங்களில், 7.153 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்து உள்ளது. பின், மே மாதம், 8ம் தேதி முதல், கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்தது.தமிழக பகுதியில் கால்வாய் பராமரிப்பு காரணமாக, ஆகஸ்ட் மாதம் தண்ணீரை நிறுத்துமாறு தமிழக அரசு, ஆந்திர அரசை கேட்டுக் கொண்டது. ஆனாலும், முழுதும் தண்ணீர் நிறுத்தாமல் வினாடிக்கு, 30 -- 50 டி.எம்.சி., வரை தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்தது.கால்வாய் பராமரிப்பு பணியால் வந்து கொண்டு இருந்த கிருஷ்ணா நீர், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது.கண்டலேறு அணையில் தற்போது, 53 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இதனால் வினாடிக்கு, 2,100 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆந்திர மாநில விவசாய தேவைக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதன் தேவை தற்போது குறைந்துள்ளது.இதனால் தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 424 கன அடிநீர் வந்து கொண்டு இருக்கிறது.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி.,யில் தற்போது, 2.241 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டமான, 35 அடியில் தற்போது, 32 அடி நீர் உள்ளது.மழை நீர் வினாடிக்கு,405 கன அடியும், கிருஷ்ணா நீர், 405 கன அடி என மொத்தம், 810 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், விரைவில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தன் முழு கொள்ளளவை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.