பழவேற்காடு: -பழவேற்காடு- - காட்டுப்பள்ளி இடையே உள்ள, 12 கி.மீ., கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் தினமும் சாலை பள்ளங்களில் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் சென்றும், 15 மீனவ கிராமங்களுக்கு தீர்வு இன்றி கிடக்கிறது.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலோர பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் குப்பத்தில் இருந்து, காட்டுப்பள்ளி வரை, 12 கி.மீ., தொலைவிற்கு கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது.
லாயக்கற்ற நிலை இந்த சாலை, லைட் அவுஸ்குப்பம், தாங்கல்பெரும்புலம், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்டு உள்ளது.இந்த சாலையில் கடற்கரை கிராமங்களான காட்டுப்பள்ளி, கூனங்குப்பம், செம்பாசி பள்ளிகுப்பம், திருமலை நகர், நக்கரத்துறவு, பள்ளிகுப்பம், கரிமணல், அரங்கம்குப்பம், சாட்டன் குப்பம், கோரைகுப்பம், கருங்காலி, இருளர் காலனி, கோவிலடி, சிந்தாமணி, காளாஞ்சி என, 15 மீனவ கிராமங்கள் உள்ளன.மேற்கண்ட கிராமங்களில், 25 ஆயிரம் மீனவ மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கல்வி, சுகாதாரம், வியாபாரம் உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளுக்காக, எண்ணுார் அல்லது பழவேற்காட்டிற்கு செல்ல வேண்டும்.இந்த வழித்தடத்தில் பேருந்து வசதிகள் இதுவரை இல்லை. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் மட்டுமே இவர்களது பயணம் அமைகிறது.
கடந்த 2017ல், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் பராமரிக்கப்பட்டது. இந்த சாலை, ஆறு மாதத்தில் சேதம் அடைந்தது.இந்நிலையில், மேற்கண்ட கிழக்கு கடற்கரை சாலை, ஐந்து ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. சாலை முழுதும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. தற்போது அவற்றில் மழைநீர் தேங்கி உள்ளது.சரளை கற்கள் பெயர்ந்து கரடு முரடாகவும், கடற்கரை மணல் சாலைகளில் குவிந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை இருந்தாலும், வேறு வழியின்றி, மீனவ மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.கரடுமுரடான சாலைசாலை பள்ளங்களிலும், கரடு முரடாக இருக்கும் பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைந்து வளைந்து சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.
இருசக்கர வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. காட்டுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள எண்ணுார் துறைமுகம், புழுதிவாக்கத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள், ஆயில் நிறுவனங்கள், எரிவாயு முனையங்கள் ஆகியவற்றில் பழவேற்காடு, திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், காட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள் பணிக்கு செல்ல 15- - 20 கி.மீ., தொலைவு உள்ள இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை இல்லையெனில், தொழிலாளர்கள், மீஞ்சூர், வல்லுார், அத்திப்பட்டு வழியாக, 35- - 40 கி.மீ., சுற்றி வர வேண்டும்.நேர விரயம், பெட்ரோல் செலவினங்களை கருதி, சாலை பள்ளங்களில் சிரமத்துடன் பயணிக்கின்றனர். உடல்வலி, வாகனங்கள் பழுது என தினம் தினம் நரக வேதனையுடன் இவர்களின் பயணம் தொடர்கிறது. சாலையை சீரமைக்கக்கோரி மீனவ மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.ஊரக வளர்ச்சித் துறை பராமரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், இந்த சாலையை இதர மாவட்ட சாலைகள் பிரிவில் சேர்த்துக் கொள்ளும்படி, மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்து விட்டது.
மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் வந்தும் பழவேற்காடு- - காட்டுப்பள்ளி இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு விமோசனம் கிடைக்காமல் உள்ளது.மேற்கண்ட கிழக்கு கடற்கரை சாலையை, தரமாக அமைத்து, அங்கு, 15 மீனவ கிராமங்கள் வழியாக பேருந்து சேவை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
க்ஷஇது குறித்து மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:பழவேற்காடு -காட்டுப்பள்ளி இடையேயான சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முதலில் நபார்டு திட்டத்தின் கீழ், அந்த சாலை புதுப்பிக்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பின், இதர மாவட்ட சாலைகள் பட்டியலில் சேர்த்து தொடர்ந்து சீரமைப்பு பணிகள் ஏற்படுத்த உள்ளோம். உரிய நிதி ஒதுக்கீடு பெற்று, விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை கைவிரிப்புபழவேற்காடு- - காட்டுப்பள்ளி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கக் கோரி, தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஊரக வளர்ச்சித் துறை, மேற்கண்ட சாலை, 12 கி.மீ., என்பதால், அதை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்து விட்டோம் என, கைவிரித்து விட்டது. அதை தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை.இந்த சாலை கடற்கரையை ஒட்டி அமைந்து உள்ளதால், மழை நீர் மற்றும் கடல் நீர் சாலைகளில் தேங்கும். அதனால் சாலைகள் விரைவில் சேதம் அடைகிறது. அதற்கு தகுந்தாற்போல சாலைகளை தரமாகவும், தேவையான இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கவும் வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை தரமாக அமைவதன் வாயிலாக சுற்றுலாப் பயணியர் அதிகளவில் வந்து செல்வர். இங்குள்ள மக்களும் கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு எளிதாக சென்னை சென்று வர முடியும்.- துரை.மகேந்திரன்,மாநில தலைவர், தமிழ்நாடு மீனவர் சங்கம், பழவேற்காடு.