கடலுார்: கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கொசு மருந்து தெளிக்காமலேயே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக, கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு எழுப்பினர்.
கடலுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், தலைவர் பக்கிரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அய்யனார் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைக்காக, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியம் டெங்கு மஸ்துார்களுக்கு ஊதியம், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களில் ரூ. 13 லட்சம் செலவு செய்யப்பட்டதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர் முத்துக்குமாரசாமி (தி.மு.க.,) ஆட்சேபம் தெரிவித்து பேசுகையில், 'கொசு மருந்து எங்கு அடித்தார்கள். எனக்கு மருந்து அடித்த மாதிரி தெரியவில்லை. மருந்து அடிக்காமலேயே நிதி செலவு செய்யப்பட்டதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்' என்றார்.
பி.டி.ஓ., சக்தி பதலளிக்கையில், 'எல்லா இடங்களிலும் அடிக்க முடியாது, டெங்கு பாதிப்பு பகுதிகளில் மட்டும் அடிக்கப்பட்டது' என்றார்.ரமேஷ் (அ.தி.மு.க.,): ஒன்றியத்தில் 33 கவுன்சிலர்கள் உள்ளனர். எந்த பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது என, யாருக்குமே தெரியவில்லை. எங்குதான் மருந்து அடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.ஜெயா சம்பத் (வி.சி.,): பெரியகங்கணாங்குப்பத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கழற்றப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு சரி செய்யப்படவில்லை. எனது வார்டில் வீடுகள் கட்டவும், வீட்டு மனைகள் போடவும் வழங்கப்பட்ட அப்ரூவல் குறித்த விபரம் தேவை.பிரேமலதா (தே.மு.தி.க.,): மதலப்பட்டு ஊராட்சியில் குடிநீர் தொட்டி சேதமாகியதை இடித்துவிட்டு, புதியதாக கட்டிக்கொடுக்க மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. தற்போது ஊராட்சி சார்பில் டேங்க் இடிக்கப்பட்டது. எப்படி அனுமதி வழங்கினீர்கள்.சேர்மன்: நமக்கு அதிகாரம் இருக்கு, பணம் இல்லை. அதனால், ஊராட்சி சொந்த நிதியில் இடித்துக்கொள்வதாக கூறினார்கள், அனுமதி கொடுத்தோம்.
கார்த்திகேயன் (தி.மு.க.,): கட்டடங்கள் கட்டுவது உள்ளிட்ட அதிகாரங்கள் ஒன்றியத்திற்கு உள்ளது. அவைகளை பராமரிக்கும் உரிமைதான் ஊராட்சிக்கு உள்ளது. எனது வார்டில், ஒன்றிய குழு பொது நிதியில் இருந்து தலா ரூ. 9 லட்சம் செலவில் 10க்கும் மேற்பட்ட அழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால், எந்த தகவலும் இல்லாமல் ஊராட்சி சார்பில், பிடுங்கி எடுக்கின்றனர்.
ஜெயராமன் (பா.ம.க.,): கவுன்சிலர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு, எங்களுக்கு உள்ள அதிகாரத்தை கூறினால், அதற்கேற்ப நாங்கள் உரிமையை கேட்க வசதியாக இருக்கும். எங்கள் பகுதியில் சாலை தரமில்லமல் போடுகின்றனர். ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளதா.தமிழழகி (தி.மு.க.,): சாத்தாங்குப்பம் சாலை மிக மோசமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். 500 மீட்டர் உள்ள அந்த சாலையை விரைந்து போட்டுத்தர வேண்டும்.
துணை சேர்மன் அய்யனார்: திருவந்திபுரம் ஊராட்சியில் 500 மீட்டர் நீள மணவெளி சாலை மோசமாக உள்ளது. கலெக்டர் வரை புகார் தெரிவித்தும் இதுவரை போடவில்லை. சாலையை விரைந்து போட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்