சென்னை :சென்னை மாநகராட்சியில் வரிகள் மற்றும் குத்தகை கட்டணத்தில், 1,794.41 கோடி ரூபாய் நிலுவை உள்ளது அம்பலமாகியுள்ளது. வசூலிக்க வேண்டிய 2,283.94 கோடி ரூபாய் மொத்த வருவாயில், 489.53 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து, வரி செலுத்தாமல் 'கல்தா' கொடுப்போரின், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை துண்டிக்க, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கணக்கு துறை நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியதாவது:
நிலம் மற்றும் உடைமைத் துறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 446 நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன.
கடந்த 2021 மார்ச் 31ம் தேதி வரை குத்தகை கேட்பு தொகை, 419.52 கோடி ரூபாய். இதில் 0.65 சதவீதமான 2.69 கோடி ரூபாயை மட்டுமே மாநகராட்சி வசூலித்துள்ளது. மீதம் 416.83 கோடி ரூபாய் நிலுவை தொகையாக உள்ளது.
கடந்த 2020 - 21ல், கல்வி பயன்பாட்டிற்காக குத்தகைக்கு விடப்பட்டவற்றின் வாயிலாக, 248.95 கோடி ரூபாய் நிலுவை தொகையாக உள்ளது
வால்டாக்ஸ் சாலையில் மட்டும் வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 201 நிலங்களில், 92.91 கோடி ரூபாய் வாடகை நிலுவை உள்ளது
மற்ற இடங்களில் வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட 75 நிலங்களில், 45.7 கோடி ரூபாய்; குடியிருப்புக்கு வழங்கப்பட்ட 136 நிலங்களில் 8 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது
தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆறு நிலங்களில் 3.96 கோடியும், மதச்சார்புடைய அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நான்கு நிலங்களில் 2.75 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவை உள்ளது.
மேலும், 62 வழக்குகள் காரணமாக, குத்தகை தொகை வசூலிக்க முடியாமல் உள்ளது.
இந்த 446 நிலங்களைத் தவிர்த்து, மாநகராட்சிக்குச் சொந்தமான பல நிலங்கள், அவற்றின் விபரங்கள், குத்தகை கேட்பு, வசூல் மற்றும் நிலுவை தொகை விபரங்கள் ஆகியவற்றையும், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வருவாய் துறை
கடந்த 2020 - 21 ஆண்டு சொத்து வரி 1,012.78 கோடி வசூலாக வேண்டும். ஆனால், 409.78 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. இது, 40.48 சதவீதம். 602.57 கோடி ரூபாய் நிலுவை.
கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக, 56 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 852.07 கோடி ரூபாய் தொழில் வரியில், 8.98 சதவீதமான, 76.53 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளத. 775.54 கோடி ரூபாய் வசூலாகவில்லை.
இதன்படி, 2,283.94 கோடி ரூபாய் மொத்த வருவாயில், 489.53 கோடி மட்டுமே மாநகராட்சி வசூலித்து உள்ளது. மீதமுள்ள 1,794.41 கோடி ரூபாய், நிலுவை தொகையாக உள்ளது.
நிலைக்குழு தணிக்கை ஆய்வின் போது, பல நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு நிலத்திற்கு, குடியிருப்பு அடிப்படையில் வரி செலுத்தி வருகின்றன.
இவ்வாறு கோடிக்கணக்கில் வணிகம் செய்து வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்து வரி வசூலின் போது 11.78 கோடி ரூபாய் காசோலையாக பெறப்பட்டு, அவை வங்கியில் 'பவுன்ஸ்' ஆகி உள்ளது.
தற்போதைய சூழலில், காசோலை வாங்குவதற்கு பதிலாக கார்டு, 'யுபிஐ பேமென்ட்' ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஓராண்டுக்கு மேல் வரி செலுத்தாதவர்களுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியின் வருமானத்தை பெருக்க, 29 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள நிறும வரி, எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத 'கேபிள் டிவி' தரை வாடகையை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
சென்னையில் 1976ல் இருந்து குத்தகை விவகாரங்களில், தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பின் விடப்படுகிறது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைக்கு முன்னுரிமை அளித்து வாடகைக்கு நிலம் விடப்படுகிறது.
கடந்த 2018ல் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், குத்தகை கட்டணத்தில் வணிக பயன்பாட்டுக்கு 14 சதவீதமும், வணிக பயன்பாடு அல்லாத இடத்திற்கு 7 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
இதில் சிலர், 200 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் நீதிமன்றம் சென்றதால், கட்டணத்தில் சில மாற்றங்களை கொண்டு வர அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். மேலும், நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளிலும் விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'சென்னையில் உள்ள அம்மா உணவகங்களால் ஒன்பது ஆண்டுகளில் 786.98 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, வருவாய் மிக குறைவாக உள்ள அம்மா உணவகங்களை மூட வேண்டும்.மேலும், 'ஏரியா' சபைக்கு செலவாகும் தொகையை மாநகராட்சி ஏற்க வேண்டும்' என, கணக்கு குழு தலைவர் தனசேகரன் கோரிக்கை வைத்தார்.இதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசியதாவது:அம்மா உணவகம் துவங்கியதில் இருந்து எப்படி செயல்படுகிறதோ, அதேபோல் தொடர்ந்து செயல்படும். பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 'ஏரியா' சபை கூட்டத்திற்கு மாநகராட்சி சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் டீ, தண்ணீர் போன்ற செலவை மாநகராட்சி ஏற்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.