சித்தாமூர்:வெண்ணாங்குப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான கலைத் திருவிழா, நேற்று நடந்தது.
சித்தாமூர் ஒன்றியத்தில், 32 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இங்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில், பள்ளி அளவிலான கலைத் திருவிழா, கடந்த வாரம் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்று, முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, வட்டார அளவிலான கலைத் திருவிழா, நேற்று வெண்ணாங்குப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.
இதில், 32 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த, 1 முதல் 5 வகுப்பு மாணவர்களிடையே, நடனம், பேச்சு, கவிதை, வரலாற்று நாடகம், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதியில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுப் பொருட்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.